விளாத்திகுளம்,பிப்.10: கடைக்கோடி மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது என ஒன்றிய அரசை கண்டித்து விளாத்திகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்து விளாத்திகுளம் கலைஞர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் நடந்தது. தலைமை வகித்த தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான பேசுகையில் ‘‘தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற நல்லாட்சி நடந்து வருகிறது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் திராவிட மாடல் அரசு தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது. விவசாய நலனுக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்து அனைத்து விவசாயிகளும் மானிய விலையில் விவசாய பொருட்களை பெற வழிவகை செய்து வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க விடியல் பயணம் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றிற்கு தமிழக முழுவதும் உள்ள 50 லட்சம் வரையிலான பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்.
பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதை ஒப்புக்கொள்ளும் ஒன்றிய அரசு, தனது நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவொரு நிதியும் வழங்கவில்லை. ஆனால், பெரும் பணக்காரர்களுக்கு ரூ.25 லட்சம் கோடி தள்ளுபடி செய்கிறது. சென்னை, தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போதிய நிவாரண தொகையை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இருப்பினும் திமுக அரசு மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கியதுடன் சீரமைப்பு பணிகளையும் சிறப்பாக செய்துள்ளது.
தமிழ்நாட்டின் மரபை வஞ்சிக்கும் ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வலுவாக எதிர்த்து வருகின்ற நிலையில் எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு வழக்கம் போல் ஜால்ரா அடித்துக்கொண்டு வாய்மூடி நிற்கிறது. இதேபோல் பெரியாரை புகழ்ந்த வாய் தற்போது ஒன்றிய அரசின் பி டீமாக மாறியுள்ளதோடு அவதூறாகப் பேசிவருகிறது.
தமிழகத்தின் கடைக்கோடி மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள் சிறப்பாக செயல்பாட்டால் 234 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும்’’ என்றார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் மணிவண்ணன், திருப்பூர் கூத்தரசன் சிறப்புரை ஆற்றினர். நிகழ்வில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நெசவாளர் அணி மாநில துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், அன்புராஜன், செல்வராஜ், ராமசுப்பு, மும்மூர்த்தி, சின்னமாரிமுத்து, காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன், இளைஞர் அணி முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளர் இமானுவேல், துணை அமைப்பாளர் மகேந்திரன், நகரச் செயலாளர்கள் வேலுசாமி, மருதுபாண்டியன், கருணாநிதி, பாரதிகணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாக்கண்ணு, முத்துலட்சுமி, பேரூராட்சி தலைவர்கள் அய்யன்ராஜ், வனிதா, ராமலட்சுமி, சங்கரநாராயணன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் அன்பழகன், மாணவர் அணி மாநில துணை செயலாளர் புளோரன்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
The post கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்கி வரும் திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது appeared first on Dinakaran.