திருத்தணி: திருத்தணி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் மிதமான வேகத்தில் சென்றன. இதேபோல், அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் சென்ற பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக திருத்தணி உட்பட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு நிலவுகிறது. அதன்படி நேற்று அதிகாலையும் பனிப்பொழிவு அதிகரித்த நிலையில் காணப்பட்டது. இதனால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்திருந்ததால், அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. மேலும், நேற்று காலை 9 மணிவரை கடும் பனிப்பொழிவு நிலவியது.
இதேபோல் ரயில் போக்குவரத்துக்கும் பனிப்பொழிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திருத்தணி ரயில் நிலையத்துக்கு வந்து சென்ற அனைத்து விரைவு மற்றும் மின்சார ரயில்களும் கடும் பனிப்பொழிவு காரணமாக மிதமான வேகத்தில் சென்றன. இதனால் ரயில்களில் பயணம் செய்த சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வேலைக்குச் சென்றவர்கள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர். கடும் பனிமூட்டம் நிலவியதால் ரயிலை விரைவாக ஓட்டுவதிலும் இன்ஜின் டிரைவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. அதன் காரணமாக மிதமான வேகத்தில் ரயில்களை இயக்கினர். மேலும், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டத்தினால் நேற்று ரயில் சிக்னலும் சரிவர தெரியவில்லை.
இதன் விளைவாக அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் மிதமான வேகத்தில் சென்றன. பின்னர் காலை 9 மணிக்குமேல் அனைத்து போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது என்று பயணிகள் தெரிவித்தனர்.
The post கடும் பனிப்பொழிவு காரணமாக திருத்தணி பகுதிகளில் மிதமான வேகத்தில் இயக்கப்பட்ட ரயில்கள்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.