
துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 250 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியினர், இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக நியூசிலாந்து 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக இந்தியா 44 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், தற்போது மிகச் சிறப்பான பார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய கடினமான காலகட்டம் குறித்தும், நேற்றைய ஆட்டத்தில் அக்சர் பட்டேலுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் குறித்தும் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் எந்த ஒரு நபரையும் சார்ந்து இருப்பதை காட்டிலும் தனியாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்பட கற்றுக் கொண்டேன். ஏனெனில், கடினமான காலத்தில் நமக்கு யாரும் உதவவும் முன்வர மாட்டார்கள்.
அந்த நேரத்தில் நமக்கு நாமே நம்பிக்கையை கொடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனக்கு நடந்த விசயங்கள் என்னை டெக்னிக்கலாக நிறைய வேலை செய்ய வைத்துள்ளது. நேற்று நான் பேட்டிங் செய்ய வந்தபோது கூட மைதானம் மிகவும் மெதுவாக இருந்தது. அதன் காரணமாகவே நான் மிகவும் பொறுமையாக விளையாடினேன்.
ரன் எடுக்க மிகவும் சிரமமாக இருந்ததாலேயே தேவையான பந்துகளை அடித்தும் மற்ற பந்துகளுக்கு மரியாதை கொடுத்தும் மெதுவாக செயல்பட்டேன். அக்சர் பட்டேலும் மிகச் சிறப்பாக எனக்கு ஒத்துழைப்பு தந்தார். முதலில் பொறுமையாக ஆரம்பித்து பின்னர் பவுண்டரிகள் வரவர ஆட்டம் எங்கள் பக்கம் வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.