சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT) 31-வது ஆண்டு விழா, அதன் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன் கலந்துகொண்டு, என்ஐஒடி சார்பில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடல்சார் நுண்ணுயிர் நிலையத்தை காணொலி மூலம் திறந்துவைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சரக்கு கப்பல்கள் புறப்படும் நாடுகளில், நிலைத்தன்மைக்காக அதில் நீர் நிரப்புவது வழக்கம். இந்திய துறைமுகங்களை வந்தடைந்து, இங்கு சரக்குகளை இறக்கிய பிறகு, அந்த நீரையும் வெளியேற்றுவார்கள். இதனால், அந்தநாடுகளில் உள்ள கடல் உயிரினங்கள், நுண்ணுயிர்கள் இங்கு வளரத்தொடங்கும். சில நேரம், அவை இங்குள்ள உயிரினங்களை அழித்துவிடலாம். அவ்வாறு கப்பல்களில் இருந்து வெளியேற்றும் நீரை சுத்திகரித்து, ஆபத்தான நுண்ணுயிர்களை அழிக்கும் நிலையம் திருப்பதிமாவட்ட கடலோர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அது இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.