
தமிழ்நாட்டில் 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடல் பகுதி ஒருபக்கம் பெரிய, சிறிய துறைமுகங்களின் இருப்பிடமாக இருந்தாலும், மற்றொருபுறம் கடலோரங்களில் உள்ள மாவட்டங்களில் வாழும் மீனவர்களுக்கு வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. இந்த மீனவர்களுக்கு வேறு தொழில் தெரியாது, அதற்கான ஆதாரங்களும் அவர்கள் வாழும் கடலோர பகுதிகளில் இல்லை. மீன்பிடி தொழில் மீனவர்களின் பாரம்பரிய தொழிலாகும். சுட்டெரிக்கும் வெயில், கனமழை, ஆர்ப்பரித்து எழும் அலைகள், பெரும் புயல் என்று பல இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே தங்கள் தொழிலை செய்துவருகிறார்கள். கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் திரும்பி வந்தால்தான் நிச்சயம் என்ற நிலையில், அவர்களின் குடும்பத்தினர் பத்திரமாக இல்லம் திரும்பும் வரை கடல் அன்னையை வழிபட்டுக்கொண்டு இருப்பார்கள்.
சுனாமியையே எதிர்கொண்ட தமிழக மீனவர்களுக்கு 2009-ம் ஆண்டு முதல் ஆபத்து தொடங்கியது. கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவதும், கைது செய்து படகுகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகிவிட்டது. முன்பு அவர்கள் கைது செய்யப்பட்டதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுவதும், அவர் ராஜ்ய உறவு மூலமாக அவர்களை விடுதலை செய்ய செய்வதும் வழக்கமாக இருந்தது. ஆனால் சமீபகாலங்களாக இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதும் புது கதையாகிவிட்டது. விடுதலை செய்யப்பட்ட பிறகும் மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் உபகரணங்கள் திருப்பிக் கொடுக்கப்படுவதில்லை.
இதற்கிடையே இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 5-ந்தேதி கடிதம் எழுதியிருந்தார். இதுபோன்ற துயரத்தில் வாழ்க்கையை நடத்தும் மீனவர்களுக்கு, இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலோடு புதிதாக இலங்கையில் இருந்து வரும் கடல் கொள்ளையர்களாலும் ஆபத்து உருவாகியுள்ளது. ஆங்காங்கு சிறு, சிறு சம்பவங்களாக நடந்துவந்தது இப்போது பூதாகரமாக அடிக்கடி நடக்கத்தொடங்கிவிட்டது. கடந்த மே மாதம் மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மீனவர்கள் 24 பேரை வெவ்வேறு சம்பவங்களில் இலங்கையில் இருந்து வந்த கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் இடைமறித்து தாக்குதல் நடத்தியதோடு, அவர்களிடம் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.
இதேபோல வெவ்வேறு சம்பவங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செருதூர் பி.எஸ்.என்.எல். சுனாமி குடியிருப்பை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடம் இருந்த மீன்பிடி வலை, பேட்டரி, ஜி.பி.எஸ். கேப், செல்போன், லைட் உள்பட ரூ.7 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றுள்ளனர். இதில் காயமடைந்த மீனவர்கள் 4 பேர் நாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இனி கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும்தான். அவர்கள்தான் பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள இடங்களில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் கப்பல்கள் தீவிர ரோந்து வந்தால் இலங்கை கடற்படையினரோ குறிப்பாக இலங்கை கடல் கொள்ளையர்களோ அவர்களை நெருங்கமாட்டார்கள். இலங்கை கடற்படையினரிடமும் கடல் கொள்ளையர்களின் நடமாட்டத்தை ஒழிக்க மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்.