சென்னை: சென்னை ஐ.சி.எப். ஆலையில், தெற்கு ரயில்வேக்கான முதல் ஏசி மின்சார ரயில் பிப்ரவரி முதல் வாரத்தில் தயாரானது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில், சென்னை ரயில் கோட்டத்தில் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும்.
அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பு வசதிகள் உள்ளன. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். இந்த ரயில் தாம்பரம் யார்டில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்படுகிறது.