சேலம்: கடன் தொல்லையால் தொழிலதிபர், மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். சேலம் அரிசிபாளையம் முத்தையால் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(45). இவர், வெள்ளி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ரேகா(38). மகள் ஜனனி(16), தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். வங்கியில் பால்ராஜ் கடன் வாங்கி வீடு கட்டினார். வெள்ளி தொழிலும் சரியாக நடைபெறவில்லை. இதனால், அவர் வங்கி கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையே வங்கியில் இருந்து வீட்டுக்கு வந்தவர்கள் பணத்தை கட்டும்படி கேட்டுள்ளனர். நேற்றும் காலையிலேயே வங்கியில் இருந்து வந்துள்ளனர்.
வெளியே நின்று அழைத்தும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததால் அவர்கள் சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது. மேல் மாடியில் உள்ள அறையில் பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகியோர் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். பால்ராஜ் எழுதி வைத்திருந்த கடிதத்தில், அதிகளவு கடன் வாங்கி விட்டேன். அதனை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே, நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.
வங்கி தவிர வேறுயாரிடமும் கந்து வட்டி வாங்கி கொடுமை படுத்தியதால் தற்கொலை செய்துள்ளனரா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post கடன் தொல்லையால் தொழிலதிபர், மனைவி, மகளுடன் தற்கொலை appeared first on Dinakaran.