திருமலை: திருமணத்திற்கு பெற்றோருடன் வந்த 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம், மைலாவரம் மண்டலத்தில் உள்ள கிராமத்தில் வழிபாட்டு தலத்தில் நேற்று அதே கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ஜம்மலமடகு மண்டலம் மொரகுடி கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் புரோதட்டூர் மண்டலம் அம்ருதநகர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி தனது 3வயது மகளுடன் கலந்துகொண்டனர். அப்போது மொரகுடி கிராமத்தை சேர்ந்த ரகமத்துல்லா(26) என்பவர், சிறுமியுடன் பேசியபடி விளையாடிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று திருமணம் முடிந்த சில நிமிடங்களில் சிறுமி காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் என பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வழிபாட்டு தலத்திற்குள் வந்த ரகமத்துல்லாவிடம் சிறுமி குறித்து கேட்டுள்ளனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். மேலும் அவரது சட்டையில் ரத்தக்கறை இருந்துள்ளது. அதுகுறித்து கேட்டபோது அவர் தப்பியோட முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள், அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அவரிடம் விசாரித்தபோது, சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததும், பின்னர் சிறுமியை அடித்து கொன்று புதரில் வீசியதும் தெரியவந்தது. இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று புதரில் இருந்து சிறுமியின் சடலத்தை மீட்டனர். மேலும் சிறுமியின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ரகமத்துல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பலாத்காரம் செய்து சிறுமி கொலை: வாலிபர் வெறிச்செயல் appeared first on Dinakaran.