சென்னை: பதிவுத்துறையில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு (அக்டோபர் மாதம் வரை) ரூ.1,222 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள்/தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில்: ‘‘பதிவுத்துறையில் கடந்த 2023-2024ம் ஆண்டின் முதல் 7 மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) வருவாய் ரூ.10,511 கோடி. நிகழும் 2024-ம்25 ஆண்டில் முதல் 7 மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) வருவாய் ரூ.11733 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக ரூ.1222 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான வருகிற 14ம் தேதி மற்றும் 15ம் தேதி ஆகிய தினங்களில் ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 சாதாரண முன் பதிவு டோக்கன்களும், ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடுகிறேன் என்றார்.
இந்த கூட்டத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கடந்தாண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் பதிவுத்துறையில் இந்தாண்டு ரூ.1,222 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.