கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் சென்னையில் அதிகாலை மழையால் மக்கள் மகிழ்ச்சி

19 hours ago 1

சென்னை: கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில்,சென்னையில் அதிகாலை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை, செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மித அளவிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்துள்ளது.

இன்று காலை முதல் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே மழை பெய்தது. இந்நிலையில், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், ஆலந்தூர், மயிலாப்பூர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான மதுராந்தகம், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதேபோல், தென் தமிழகத்தில் சிவகங்கை, காரைக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் காலையிலேயே மழை பெய்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:தமிழகத்தில் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . வரும் 6 முதல் 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில்,அதிகாலை மழையால், வானிலை குளிர்ச்சியாக மாறியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் சென்னையில் அதிகாலை மழையால் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article