கடந்த ஆண்டு பெஞ்சல் புயலில் சேதமான அதனூர் ஏரியின் கரையை விரைந்து சீரமைக்க வேண்டும்

6 hours ago 2

*விவசாயிகள் கோரிக்கை

கண்டாச்சிபுரம் : வடதமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய பெஞ்சல் புயலால் இயற்கை வளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் தாக்கத்தால் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி மழைநீர் வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

மேலும் பல்வேறு கிராமங்களில் ஏரியின் கரை மழை வெள்ளத்தில் உடைந்து ஊருக்குள் மழைநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்த அதனூர் ஊராட்சிக்குட்பட்ட சுமார் 30 ஏக்கர் அளவுள்ள ஏரி அமைந்துள்ளது.

இதில் பெஞ்சல் புயலின்போது மழை வெள்ளம் புகுந்து ஏரி நிரம்பி கரை அடித்து சென்றது. இதனால் தற்போது ஏரியில் சுத்தமாக நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழையில் ஏரியில் நீர் தேங்காமல் உடைந்த ஏரி கரை வழியாக நீர் வெளியேறிவிடுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் ஏரியை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கோடை காலங்களில் நீரின்றி வறட்சியால் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதேபோல் வருகின்ற மழை காலங்களில் ஏரியில் மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளதாகவும், வரும் மழை காலங்களில் ஏரிக்கு வரும் மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்து பயிர் சேதமடையும் என விவசாயிகள் வேதனைக்குள்ளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடைந்த ஏரியின் கரையை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடந்த ஆண்டு பெஞ்சல் புயலில் சேதமான அதனூர் ஏரியின் கரையை விரைந்து சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article