கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசால் 1,584 உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

2 days ago 2

சென்னை: கடந்த 4 ஆண்டுகளில், திமுக அரசால் 1,584 உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசியதாவது:
2021ல் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் அனைத்து கால நிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்தினை உறுதி செய்ய, 1,281 தரைப் பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,066 பணிகள் முடிவுற்றது, 131 பணிகள் நடைபெற்று வருகிறது. 84 பாலங்கள் இந்த நிதியாண்டில் கட்டப்படும். தரைப் பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றுவது, புதிதாக ஆற்றுபாலங்கள் அமைப்பது, குறுகிய பாலங்களை மாற்றியமைப்பது, புறவழிச்சாலைகளில் பாலங்கள் அமைப்பது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசால் 1,584 உயர்மட்ட பாலங்கள் கட்டப் பட்டுள்ளன.

சாலை விபத்துகளை தடுத்திடும் விதமாக 415 கரும்புள்ளிகள் கண்டறியப்பட்டு, அதில், 408 மேம்பாடு செய்யப்பட்டுள்ளது, ஏழு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. தமிழ்நாடு அரசால் கரும்புள்ளிகள் உருவாவதற்கு முன்பாகவே, 3,483 ஹாட் ஸ்பாட் கண்டறியப்பட்டு, 2,638 மேம்படுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுமத்தின் வழிகாட்டுதலின்படி, சாலை பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சாலை சந்திப்புகளை நிரந்தரமாக மேம்படுத்துவதன் மூலம் விபத்துகளை குறைக்க, தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 72 பணிகள் ரூ.110 கோடி மதிப்பில் செயலாக்கப்பட்டுள்ளது. விபத்தில்லா மாநிலம் என்ற முதல்வரின் கனவை செயல்படுத்த பள்ளங்கள் அற்ற சாலை என்ற இலக்கை அடைய, பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கலாம் அதற்காக, “நம்மசாலை” என்கின்ற செயலி உருவாக்கப்பட்டுட்டுள்ளது. இதுவரை இந்த செயலியின் மூலமாக 13,300 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை உருவான காலம் முதல் 2021ம் மார்ச் வரை 1,074 ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தனர். இவ்வரசு பொறுப் பேற்றதிலிருந்து, (2021-25) கடந்த நான்கு ஆண்டுகளில், 1,255 ஒப்பந்ததாரர்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நெடுஞ்சாலைத் துறையில் பாலங்களை ஆய்வு செய்து, அதன் உறுதி தன்மையை கண்டறிந்து, பழுதுகளை உடனுக்குடன் சீரமைக்க நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை கொண்ட, “பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு” உருவாக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரியில், விவேகானந்தர் நினைவு இல்லத்தையும் – திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் கடலில் நடை மேம்பாலம் கட்ட 2016ம் ஆண்டு ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை மூலம் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியது. மாநில அரசின், பல துறைகள் ஆய்வுக்கு பின், முடியாது என்ற நிலையில் தான் 2020ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு பணி ஒப்படைக்கப்பட்டது. அங்கும், 2 ஆண்டுகாலம் கிடப்பில் கிடந்தது. நெடுஞ்சாலைத் துறையின் ஆய்வு கூட்டத்தை நடத்திய போது, இந்த பாலத்திட்டம் இவ்வளவு நாள் ஏன் கிடப்பில் போடப்பட்டது என்ற வினாவை எழுப்பினார்?

நிலமைகளை எடுத்துச் சொன்னோம். “முயற்சி திருவினை ஆக்கும்” “எண்ணித் துணிக கருமம்” என்று அறிவுரை வழங்கினார். பாலங்கள் அமைப்பதற்கு மட்டுமே கோப்புகள் இருந்தது. ஆனால் முதல்வர் கண்ணாடி பாலமாக அமைக்க அறிவுறுத்தினார். அதன் தொடர் முயற்சியால், ஐஐடி பேராசிரியர்களின் முழு ஒத்துழைப்புடன், 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட “கண்ணாடி இழைப்பாலம்” கடலின் நடுவே “நெட்வொர்க் ஆர்ச் பிரிட்ஜ் நவீன முறையில் 64 மெக்காலே கம்பிகள் பயன்படுத்தி கட்டப்பட்டு, 2024 டிசம்பர் மாதம் 30ம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியாவிலேயே கடல் நடுவே கட்டப்பட்டுள்ள ஒரே “கண்ணாடி இழைப் பாலம்“ தமிழ்நாட்டில் மட்டும் தான். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6.31 லட்சம் பேர் வந்துள்ளனர். உலக சுற்றுலாப் பயணிகள் வியக்கத்தக்க வகையில் குமரியின் புதிய அடையாளமாக கண்ணாடி இழைப்பாலம் திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசால் 1,584 உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article