சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் 70 சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கான மணிமேகலை விருதுகள் மற்றும் ₹ 1 கோடியே 18 லட்சம் விருதுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் 516 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 6,135 உறுப்பினர்களுக்கு ₹30.20 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதில் சிறப்பாக செயல்படும் 13 வங்கிகள் மற்றும் வங்கிக் கிளைகளுக்கு வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியே மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை கவுரவிக்கின்ற நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. நமது அரசு பொறுப்புக்கு வந்த கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 14 லட்சத்து 91,985 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 750 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் நடைபெற்ற கடந்த கால ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹84 ஆயிரத்து 815 கோடி மட்டுமே வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டது. ஆனால் திராவிட மாடல் அரசு அமைந்த 2021-2022ம் முதல் இந்த நாள் வரை ₹92 ஆயிரம் கோடி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஓராண்டில் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ₹1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விருதுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ₹92,000 கோடி கடனுதவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.