- சித்திரை விசு திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்
- பல்வேறு வழக்குகளில் விசாரணை கிடப்பில் போடப்பட்டதாக புகார்
விகேபுரம்,ஏப்.11: கடந்த 2 மாதங்களுக்கு மேலாக காலியாக இருப்பதால் விகேபுரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நியமனம் எப்போது? என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சித்திரை விசு திருவிழா நடைபெற்று வரும் சூழலில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வழக்குகளில் விசாரணை கிடப்பில் போடப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
விகேபுரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுஜித் ஆனந்த் கடந்த ஜனவரி 25ம் தேதி திடீரென வீரவநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வீரவநல்லூரில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் கவுதம் விகேபுரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
ஆனால் அவர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நிரந்தர இன்ஸ்பெக்டர் இல்லாமல் விகேபுரம் போலீஸ் நிலையம் தவித்து வருகிறது. அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் (பொறுப்பு) இன்ஸ்பெக்டராக மாறி, மாறி செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை விசு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விகேபுரத்தில் 13ம் தேதியும், 14ம் தேதி பாபநாசத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் விகேபுரம், பாபநாசம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
எனவே இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை விகேபுரம் இன்ஸ்பெக்டர் தான் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே, அம்பை, கல்லிடைக்குறிச்சியில் உள்ள கோயில்களில் விழா நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் அப்பகுதியில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களால் பாபநாச சுவாமி சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்பாடுகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விகேபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி, குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பாபநாசம் வயல்வெளியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான விசாரணையை கூட இன்ஸ்பெக்டர் இல்லாததால் தீவிரம் காட்டாமல் விசாரணையை கிடப்பில் போட்டுள்ளனர். இதே போன்று பல்வேறு வழக்குகளில் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சித்திரை விசு திருவிழா தேரோட்டம், தெப்பத்திருவிழா நடைபெறவுள்ள நிலையில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வசதியாக விகேபுரம் போலீஸ் நிலையத்தில் நிரந்தர இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் எனவும், அப்போது தான் திருவிழாவை எந்த வித பிரச்னையும் இல்லாமல் விழாவை முடிக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
The post கடந்த 2 மாதங்களுக்கு மேலாக காலியாக இருப்பதால் விகேபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நியமனம் எப்போது? appeared first on Dinakaran.