கஞ்சா விற்று வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் கைது

3 weeks ago 9

குன்றத்தூர்: பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்களை குறிவைத்து ஒரு கும்பல் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதன் அடிப்படையில், போலீசார் நேற்று முன்தினம் பல்லாவரம் ரேடியல் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது, தனியார் கல்லூரி அருகே கையில் மூட்டை முடிச்சுகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 வடமாநில தொழிலாளர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த மூட்டையை வாங்கி பிரித்துப் பார்த்தபோது, அதில் சிறுசிறு பொட்டலங்களாக சுமார் 22 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச்சென்று, முறைப்படி அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஸ்ரபா பல்வார்சிங் (26), சன்தன் பாலியர்சிங் (27), அஞ்சனா டிகால் (40) என்பதும், 3 பேரும் ஒடிசா மாநிலம், பள்ளிகொண்டா பகுதியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக விலைக்கு வாங்கி, அதனை ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து, சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில கட்டிட தொழிலாளர்களை குறிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த கஞ்சாவின் மதிப்பு ₹22 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கஞ்சா விற்று வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article