புழல்: செங்குன்றம் அருகே ஆட்டந்தாங்கல் பகுதியில், சோழவரம் தனிப்படை போலீசார் கடந்த 18ம்தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கையில் பையுடன் நடந்து சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்களின் பையை சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, 2 பேரையும் சோழவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, நடத்திய விசாரணையில், அவர்கள் செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகர், 7வது தெருவைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் (19), எடப்பாளையம் அய்யா கோயில், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சண்முகவேல் (19) ஆகியோர் என்பதும், பையில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுத்து அனுப்பியது யார்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கஞ்சா கடத்திய 2 பேர் கைது: 2 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.