
ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் திருவிழா மற்றும் திருத்தேரோட்ட விழா கடந்த 11-ம் தேதி திரௌபதி அம்மன் பூச்சாற்றுதல் வைபவத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று இரவு தருமர் பட்டாபிஷேகம் கதை, பாரதம் பாடுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.
வரதராஜ பெருமாள், கிருஷ்ணர், பெரிய மாரியம்மன், திரௌபதி அம்மன், பாண்டு மகாராஜா, பீமன், அர்ஜுனன், சகாதேவன், குந்தியம்மாள் ஆகிய 9 உற்சவ மூர்த்திகள், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் எழுந்தருளினர். பின்னர் தேர்கள் ஊரை சுற்றி வலம் வந்தன. இரவு 11 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்ட தேர்கள், விடிய விடிய ஊர்வலமாக சென்று கோட்டை மைதானத்தை வந்தடைந்தன.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருத்தேர் ஆலயம் செல்லுதல் நிகழ்ச்சியும், அதன்பின்னர் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, திருகோடி தீபம் ஏற்றுதல், அர்ஜுனன் தவசு மரம் ஏறுதல், கருட பகவான் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து அரவான் களப்பலி, கோட்டை இடிப்பு மாடு வளைப்பு, உத்திரகுமாரனை தேரில் கட்டுதல், குதிரை ஏற்றம் நிகழ்ச்சியும், மாலையில் அக்கினி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.