சின்னசேலம், அக். 7: கச்சிராயபாளையம் அருகே விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து துர்க்கை அம்மன் சிலைகளை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தின் கிழக்கு பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றி துர்க்கை அம்மன் சிலைகள், சிவன் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சுவாமி சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் கடந்த 2022ல் பிரமாண்டமாக கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மேலும் தற்போது இக்கோயிலில் நவராத்திரியையொட்டி கடந்த சில நாட்களாக நவராத்திரி பூஜையும் நடந்து வந்துள்ளது. இதனால் கோயிலுக்கு மாலை நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து துர்க்கை அம்மன் உள்ளிட்ட சுவாமி சிலைகளை வழிபட்டு செல்வது வழக்கம். இக்கோயிலுக்கு வெங்கடேச குருக்கள் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று மாலை 6.15 மணியளவில் கோயில் குருக்கள் பூஜைக்கு வந்துள்ளார்.
அப்போது கோயில் பூட்டை திறந்து உள்ளே நுழைந்த போது கற்சிலையான துர்க்கை அம்மன் சிலை தலை உடைக்கப்பட்டும், சாதாரண சிலைகள் கை உள்ளிட்டவை உடைக்கப்பட்டும் இருந்தது. மேலும் கோயில் உள்பகுதியில் ஏசுவை புகழ்ந்து வாசகம் அடங்கிய சீட்டையும் ஒட்டி இருந்தனர். இதை கண்டு அதிர்ந்து போன குருக்கள் இதுபற்றி ஊர் தலைவர் தருமலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் தருமலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கோயில் முன்பு திரண்டனர். மேலும் கச்சிராயபாளையம் போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர், சுப்பிரமணியன், தனிப்பிரிவு ஏட்டு சிவமுருகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோயிலை சுற்றி பார்த்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கச்சிராயபாளையம் இருகே இந்து கோயில் சிலையை உடைத்துவிட்டு, ஏசுவை புகழ்ந்து எழுதிய வாசகம் அடங்கிய சீட்டை ஒட்டி சென்றதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
The post கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு: கரடிசித்தூரில் கோயில் சிலைகள் உடைப்பு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.