கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

19 hours ago 2

சென்னை,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேறியது.

இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1974-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் (கச்சத்தீவு ஒப்பந்தம்) தான் நீடிக்கும் இப்பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்த்து வந்துள்ளது. 1974-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கடுமையாக எதிர்த்தனர். 28.06.1974 அன்று மத்திய அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மாநில அரசின் இசைவின்றி கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர்உடனடியாக மறுநாளே 29.06.1974 அன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே அப்போதைய இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

அதனைத் தொடர்ந்து, கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை வன்மையாக எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் 21.08.1974 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க, கச்சத்தீவினை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலையான கோரிக்கையை வலியுறுத்தி, 03.10.1991, 03.05.2013, 05.12.2014 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டசபை இதே போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாலும், அவர்களது படகுகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்படுவதாலும், கடலோர மீனவ சமுதாயத்தினரின் வாழ்க்கை மிகுந்த கவலையிலும், துயரத்திலும் ஆழ்ந்துள்ளது. கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளால் மீனவர்களின் வாழ்வாதாரமும் நிலையற்றதாக மாறியுள்ளது. தான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியுடன் 17.06.2021 அன்று நடைபெற்ற முதல் சந்திப்பின்போது, இப்பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். மேலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முந்தைய கோரிக்கைகளை அடுத்தடுத்த சந்திப்பின் போதும் வலியுறுத்தினேன்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து 2021-ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை மந்திரிக்கும், பிரதமர் மோடிக்கும் பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளேன். 2024-ம் ஆண்டில், 530 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 2025-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 147 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நமது மீனவர்களுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனையும், பெருந்தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகிறது.

இலங்கையின் இத்தகைய தீவிர நடவடிக்கைகள் நமது மீனவர்களை வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளதால், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.

மேலும் அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும். நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article