ராமநாதபுரம்: கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு பைபர் படகுகளை அனுமதிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமேசுவரம் ஓலைக்குடா கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பட்டங்கட்டி சமுதாயம் சார்பாக அளிக்கப்பட்ட மனுவின் விவரம் வருமாறு, 1913-ம் ஆண்டில் ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப் பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் மீனவர்களின் பாதுகாவலரான அந்தோணியாருக்கு ஆலயம் ஓலைக்குடிசையில் கட்டப்பட்டது.