*பொதுமக்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி : அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளையம் மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில், ஓவர்லோடு காரணமாக பஸ் ஏற முடியாமல் நடுவழியில் நின்று விடுவதால், பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி 1 கிமீ தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டியை சுற்றி கோட்டையூர், உரிகம், தக்கட்டி, தொட்டமஞ்சி, சேசுராஜபுரம், நாட்றாம்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல்வேறு பணிகளுக்காகவும், மருத்துவமனைக்கு செல்வதற்காகவும் பென்னாகரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு வருகிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், சென்று வர போதுமான போக்குவரத்து இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அஞ்செட்டியிலிருந்து தர்மபுரிக்கு செல்லும் அரசு பஸ்களில், தினமும் கூட்டமாக சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், மாலை நேரங்களில் தர்மபுரியிலிருந்து அஞ்செட்டிக்கு போதிய பஸ்கள் இல்லாததால், பணி முடித்து வீடு திரும்பும் மக்கள், மாலை நேரத்தில் இயக்கப்படும் ஒரே அரசு பஸ்சில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
அந்த பஸ்சில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கும் நிலை உள்ளது. இந்த பஸ் பிலிகுண்டுலு வழியாக நாட்றாம்பாளையம் நோக்கி செல்லும் போது வளைவாகவும், மேடாகவும் உள்ள சாலையில் செல்லும் போது, பாதியில் நின்று விடும் அவல நிலை உள்ளது.
இதனால் பஸ்சில் உள்ள பாதி பயணிகள் கீழே இறங்கி, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, மீண்டும் சமமான சாலை வந்த பிறகு, பஸ்சில் ஏறி பயணம் செய்யும் நிலை உள்ளது. இந்த நிலை நாள்தோறும் தொடர்வதால், மாலை நேரத்தில் பென்னாகரத்தில் இருந்து நாட்றாம்பாளையம் வழியாக, அஞ்செட்டிக்கு கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
அஞ்செட்டி சுற்றி உள்ள பொதுமக்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பென்னாகரம், தர்மபுரி மற்றும் சேலத்திற்கு சென்று வருகிறார்கள். மீண்டும் வீடு திரும்புவதற்கு தர்மபுரியில் இருந்து மதியம் 1.10க்கு அரசு பஸ் உள்ளது. அதன் பிறகு மாலை 4.10 மணிக்கு ஒரு பஸ் உள்ளது. அதனை விட்டால் மீண்டும் அஞ்செட்டி செல்வதற்கு பஸ்கள் இல்லை. பென்னாகரத்திலிருந்து அஞ்செட்டிக்கு இரவு 8.30க்கு ஒரு பஸ் உள்ளது.
அந்த பஸ்சும் சில நாட்கள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் தங்களின் பணியை முடித்து, 4.10 மணிக்கு தர்மபுரியில் இருந்து புறப்படும் பஸ்சில் செல்கிறார்கள். அந்த பஸ் பென்னாகரம், ஒகேனக்கல் வழியாக செல்லும் வரும் போது, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் செல்கிறார்கள்.
அந்த பஸ் பிலிகுண்டுலு அடுத்த நாட்றாம்பாளையம் சாலையில் செல்லும் போது, பாதியில் நின்று விடுகிறது. இதனால், பயணிகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் இறங்கி நடந்து செல்லும் நிலை உள்ளது.
எனவே, பென்னாகரத்திலிருந்து நாட்றாம்பாளையம் வரை மாலை மற்றும் இரவு நேரங்களில், 2 டவுன் பஸ்கள் இயக்க வேண்டும். மலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post ஓவர் லோடால் பாதியில் நிற்கும் பஸ் மலை கிராமத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை appeared first on Dinakaran.