ஓரங்கட்ட நினைச்சா அருவாள தூக்குவோம் என மிரட்டிய மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 hours ago 2

‘‘ஓரங்கட்டி ஒதுக்க நினைத்தால் அரிவாள் செய்யுற கையில் அதை தூக்க எவ்வளவு நேரம் ஆகும்னு நிர்வாகிங்க கூட்டத்தில் ஆவேசம் காட்டிட்டாராமே முன்னாள் பால்வள மாஜி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்ட இலைக்கட்சியில் முன்னாள் பால்வளத்தின் கை ஒரு காலத்தில் பலமாகவே ஓங்கியிருந்தது. மாவட்டத்துல கிங் ஆக வலம் வந்த பால்வளத்திற்கு, தற்போது ஏகப்பட்ட எதிரிகள் முளைத்து விட்டனராம்.. ஆரம்ப காலக்கட்டத்துல தனக்கு போட்டியாக வந்து விடுவார்களோ என எண்ணி, பால்வளம் 3 பேரை கட்டம் கட்டினார்..

அவர்களில் ஒருவர் இரண்டெழுத்தை பெயர் முன் கொண்ட தொழிலதிபர் + மாஜி அமைச்சர். மற்றொருவர் தூங்காநகர ஆற்றின் பெயரை முன்னாள் கொண்ட மாஜி அமைச்சர், மற்றொருவர் தூங்கா நகரின் புறநகர் மாஜி அமைச்சரான உதயமானவர். இவர்களில் இப்போது உதயமானவர், பால்வளத்துக்கு எதிராக அரசியல் செய்யும் மாஜி எம்எல்ஏ உள்ளிட்ட சிலருக்கு பொறுப்பு வாங்கிக் கொடுத்து தனது கைக்குள் போட்டுக் கொண்டாராம்.. இதனால் மெடல் மாவட்ட இலைக்கட்சி வட்டாரத்துல, இவர் வைத்ததுதான் சட்டமாக இருக்காம்..

இவரை தவிர்த்து விரட்டி விடப்பட்ட இரண்டெழுத்து தொழிலதிபர் மாஜி மீண்டும், மாவட்ட அரசியலில் தீவிரம் காட்டுகிறாராம்.. தற்போது மாவட்டத்தில் ஒரு வீடு பிடித்து அடிக்கடி வந்து செல்கிறாராம்.. இவரிடம் வைட்டமின் ‘ப’ அதிகமிருப்பதால், மாவட்டத்தின் முக்கிய இலைக்கட்சி நிர்வாகிகள் இவரை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனராம்.. ஒரு பக்கம் இவர், மறுபக்கம் உதயமானவர் என இரு பக்கமும் நெருக்கடி அதிகரித்திருக்கிறதாம்..

மாவட்ட முக்கிய நிர்வாகிகளின் தொடர் மல்லுக்கட்டால், சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில பேசுன பால்வளம், ‘‘நம்மை ஓரங்கட்டி ஒதுக்க நினைத்தால் அரிவாள செய்யுற நம்ம கையில, அத தூக்க எவ்வளவு நேரம் ஆகும்’’னு பேசியிருக்காரு.. இந்த பேச்சுதான் மெடல் மாவட்டத்தில் பரபரப்பாக ஓடிக்கிட்டிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கொள்ளை போகும் கனிமத்தை தடுக்கணும்னு குரல் ஒலிக்க தொடங்கியிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கிரிவலம் மாவட்டத்துல தண்டத்துல தொடங்கி பட்டுல முடியுற சுற்று வட்டார பகுதிகள்ல கல் குவாரிகள் இயங்கி வருது.. இந்த குவாரிகள் எல்லாத்துலயும் மைன்ஸ் டிபார்ட்மெண்ட் அளவு செஞ்சி கொடுக்குற இடத்தை மட்டும் வெட்டி எடுக்கணும்.. அதுக்குத்தான் அவங்க அனுமதியும் கொடுக்குறாங்க.. ஆனா, மைன்ஸ் டிபார்ட்மெண்ட் கொடுத்த அளவை விட பல மடங்கு கூடுதலான பரப்பளவுல கற்களை வெட்டி எடுக்கப்பட்டிருக்குதாம்..

மைன்ஸ் டிபார்ட்மெண்ட் இந்த விதிமீறல்களை கண்டுகொள்ளவும் இல்லைன்னு புகார்கள் எழுந்துக்கிட்டு இருக்கு.. இப்படி விதிமீறல்கள் தொடர்வதால, கவர்மெண்டுக்கு பல சி நஷ்டம் ஏற்படுகிறதாம்.. இதனால மைன்ஸ் ஆபிசர்ஸ் நேரடியாக கல்குவாரிக்கு சென்று அளவீடு செய்து விதி மீறிய நபர்கள் மேல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லைன்னா, ெதாடர்ந்து கனிமவளம் கொள்ளை போய்கிட்டேத்தான் இருக்கும். இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்னு கோரிக்கை குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பட்டாசு, பிரியாணி வழங்கி சர்ச்சையில் சிக்கிய அதிகாரிக்கு சோதனை மேல் சோதனையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற முதற்கடவுளின் கோயிலில் தமிழ் கடவுளின் பெயர் கொண்ட அதிகாரி பணிபுரிந்து வருகிறார்.. பள்ளி ஆசிரியரான இவர், டெபுடேஷன் அடிப்படையில் கோயில் நிர்வாக பதவிக்கு வந்திருப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ளது.. இதனிடையே சமீபத்தில் முடிந்த ஒளிமிக்க பண்டிகையின்போது தங்களுக்கும் பட்டாசு, பலகாரம் வேண்டுமென கோயில் நிர்வாகியிடம் ஊழியர்கள் முறையிடவே, குஷியான அந்த அதிகாரியோ ஒருபடி மேலே சென்று கோயில் ஊழியர்களுக்கு பட்டாசு, பலகாரத்துடன் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணியை வழங்கி அசத்தினாராம்..

அதையும் கோயில் வளாகத்திலேயே கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கி அறநிலையத்துறை உயரதிகாரியின் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறாராம்.. இப்போ இந்த பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படின்னு ஆலோசித்து வந்த நிலையில, அடுத்ததா கோயில் குப்பை தொட்டியில மதுபாட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பூதாகரமாகி அடுத்த தலைவலியாக அமைந்திருக்காம்.. இதுகுறித்த விசாரணையில சிசிடிவி கேமரா காட்சியில் வெளிநாட்டு பயணி ஒருவர் மதுபாட்டில் வீசிவிட்டு சென்றது பதிவாகி உள்ளதாம்..

இதனால இந்த கண்டத்தில தப்பிச்சிட்டோம்னு பெருமூச்சி விட்டாலும், அடுத்தடுத்து வரும் சோதனை மேல் சோதனையால் பீதியில் உறைந்துள்ளாராம் சர்ச்சை அதிகாரி..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஊழியர்களிடம் அதிரடி காட்டும் பெண் அதிகாரிக்கு எதிரா சிலர் ரகசிய திட்டம் போடுகிறதா பேசிக்கிறாங்களே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்ட பெண் அதிகாரி எடுக்கும் நடவடிக்கைகளால் மாவட்ட தலைமை அலுவலகமே ஆடி போய் கிடக்கிறதாம்..

அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக நின்று பேசியவர்களுக்கு எல்லாம் இப்போது முட்டுக்கட்டை போட்டு விட்டாராம்.. மாவட்ட தலைமையிடத்து அலுவலக வளாகத்தில் உள்ள ஆவின் பாலகத்துக்கு அருகில் நின்று கொண்டு ஒருவர் புகை பிடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 2, 3 நாள் கண்காணிப்பு கேமராவில் பார்த்த மாவட்ட அதிகாரி, இதுகுறித்து விசாரிக்க அவர் நமது அலுவலக ஊழியர்தான் என்று உதவியாளர்கள் கூறி இருக்காங்க..

இதை கேட்டு கடுப்பான அவர், தலைமை அலுவலகத்தில் பணியில் இருந்த அந்த ஊழியரை, மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிக்கு தூக்கி அடிச்சி இருக்காரு.. இந்த நடவடிக்கையால் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள கேன்டீனும் இப்போது வெறிச்சோடி கிடக்கிறதாம்.. எவ்வளவு பிஸியாக இருந்தாலும், கேமராக்களை கண்காணித்து, அதிரடி காட்டி வருகிறாராம்.. இதனால் எப்படியாவது இவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும்னு சிலர் ரகசிய திட்டமிடுவதாக அலுவலக வட்டாரத்தில் பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார்
விக்கியானந்தா.

The post ஓரங்கட்ட நினைச்சா அருவாள தூக்குவோம் என மிரட்டிய மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article