ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு: அஞ்சல் துறை தகவல்

3 weeks ago 4

சென்னை: சென்னை மண்டல அஞ்சல் துறை அதிகாரி நடராஜன் வெளியிட்ட அறிக்கை: அஞ்சல் துறை, மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேயேண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்பிக்கும் சேவையை தபால்காரர்கள் மூலம் வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண் மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். கடந்த ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம், சென்னை மண்டலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்பித்துள்ளார்கள் சென்னை மண்டலத்தில் 2,194 அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரியும் 4100 க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மூலம் இந்த சேவையைப் பெற முடியும்.

இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும் https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx மூலம் அல்லது போஸ்ட் இன்போ செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மட்டுமன்றி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

The post ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு: அஞ்சல் துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article