
சென்னை:
சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி-யுமான சு. வெங்கடேசன் எழுத்து மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியத்துடன் விகடன் பிரசுரத்தில் வெளியாகி `வீரயுக நாயகன் வேள்பாரி' நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று `வெற்றிப் பெருவிழா' நடைபெற்றது. வேள்பாரி நாவலின் ஒரு லட்சமாவது பிரதி விற்ற வெற்றி விழா சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
அனைவரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்பத்திக் கொள்ளுங்கள். வேள்பாரி திரை வடிவத்துக்கு அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன். யாருக்காக அழுதான் புத்தகத்தில் ஜெயகாந்தனின் எழுத்து வியப்பை அளித்தது. ஜாவர் சீதாராமன், சிவசங்கரி, சாண்டில்யன், கல்கி ஆகியோர் நாவல்களை படித்துள்ளேன்.
புத்தகத்தை பற்றி பேச சிவக்குமார், கமல்ஹாசன் இருக்கின்றனர். என்னை ஏன் அழைத்தார்கள். 70 வயதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டு நடக்கும் என்னை ஏன் அழைத்தார்கள் என தெரியவில்லை. அனுபவம் உள்ளவர்கள்தான் இயக்கத்தின் தூண்கள் என சொல்ல வந்தேன். எனக்கும் ஓய்வுக்கு பிறகு புத்தகங்களை படிக்க விருப்பம் .
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நாவலாசிரியர் சு. வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த், விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நடிகை ரோகிணி, நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர், மாநில நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் வேள்பாரி வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.