சென்னை: “தமிழக அரசுத் துறைகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் குறித்த காலத்தில் நிரப்பி, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக நிர்வாகத் திறமையற்ற ஆட்சியை நடத்தி வருகிறார். 2021 திமுக தேர்தல் அறிக்கையில், அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், வாக்குறுதி எண்.187-ன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தற்போதைய பொம்மை முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.