
சேலம்,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பொன்னம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 14 ஆண்டுகள் பணியாற்றி வந்த பொன் தனராஜ், தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பொன் தனராஜ், பள்ளியின் வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 2014-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது, 2017-ம் ஆண்டு சிறந்த தூய்மை இந்தியா தேசிய விருது ஆகிய உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
மேலும் 2022-ம் ஆண்டு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்று பொன்னம்பாளையம் அரசு பள்ளியை சிறந்த பள்ளியாக தரம் உயர்த்தி பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், தற்போது பணி ஓய்வு பெற்றுள்ள பொன் தனராஜுக்கு கிராம மக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்தில் பணி நிறைவு விழாவை வெகு சிறப்பாக நடத்தினர்.
பின்னர் பொன் தனராஜை சாரட் வண்டியில் அமர வைத்து, மேள தாளங்கள் முழங்க அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியரை கிராம மக்கள் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த சம்பவம் சேலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.