ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம்

3 days ago 3

சென்னை, மார்ச் 26: சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. 2ம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூ.1,215.92 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8ம் தேதி ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. அதன் பிறகு முதல் ரயிலினை கடந்த செப்டம்பர் 22ம் தேதி தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் நடைபெற உள்ள சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயிண்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்
தக்கது.

அதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாத காலம் பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழித்தடத்தில் குறிப்பிட்ட 2.5 கி.மீ. தூரமான பூந்தமல்லியில் இருந்து முல்லைத் தோட்டம் வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர். அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 3 பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் பல்வேறு இடர்பாடுகளுக்கு பிறகு வெற்றிகரமாக முடிந்தது.
இந்நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூர் வரையில் உள்ள முழு தொலைவிற்கான 8 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 20ம் தேதிக்கு மேல் இந்த சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article