செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் காயார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு மேல்கல்வாய் கிராமத்தை சேர்ந்த அபிராமி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று பகல் 12 மணி அளவில் சந்திரன் நிலத்தில் அவருடைய மகன் தர்மலிங்கம் (வயது 44) டிராக்டர் மூலம் வயலை உழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த அபிராமியின் 5 வயது மகன் மூர்த்தியை தர்மலிங்கம் தனது மடியில் வைத்துக்கொண்டு டிராக்டரை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென நிலைத்தடுமாறி சிறுவன் மூர்த்தி தர்மலிங்கம் மடியில் இருந்து கீழே விழுந்தான்.
டிராக்டரில் சிக்கி மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த காயார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மலிங்கத்திடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.