*நண்பர்கள் கண்ணெதிரே பரிதாபம்
ஓசூர் : கர்நாடக மாநிலம், பெங்களூரு புறநகர் பகுதியான பொம்மனஹள்ளி காரேபாவி பகுதியைச் சேர்ந்தவர்கள் தீப்பு(20) மற்றும் யோகேஸ்வரன்(20). நண்பர்களான இவர்கள், ஹெப்பகோடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் கல்லூரியில் உடன் பயின்று வரும் மற்ற 3 நண்பர்களுடன் சேர்ந்து பன்னேர்கட்டா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர், அங்குள்ள சுவர்ணமுகி குளத்தில் 5 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதிக்குச் சென்ற யோகேஸ்வரன், திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே, அவரை காப்பாற்றுவதற்காக தீப்பு தண்ணீரில் பாய்ந்துள்ளார். இதில், அவரும் மூழ்கினார். அதனைக் கண்ட மற்ற நண்பர்கள் மூன்று பேரும் உதவி கேட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று, மாணவர்களை மீட்க முயன்றனர். அதற்குள் 2 பேரும் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், தீப்பு மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post ஓசூர் அருகே சுற்றுலா சென்ற இடத்தில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.