ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால், சிறுவனை கடத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேவுள்ள மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் ரோகித் உடல்நிலை சரியில்லை என பள்ளிக்குச் செல்லாமல், வீட்டில் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். ஆனால், மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. இதனால், சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் ரோஹித் கிடைக்கவில்லை.