ஓசூரில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

2 hours ago 2

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). வழக்கறிஞரான இவர் ஓசூர் கோர்ட்டு வளாகத்தில் இருந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் கண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரை வெட்டிய ஆனந்தன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் இருந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தவர் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பது தெரியவந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

வழக்கறிஞரை வெட்டிய ஆனந்தன், வேறொரு வழக்கறிஞரின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் கண்ணனை வெட்டியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் கண்ணனுக்கு கழுத்து, தலை, முதுகு உள்ளிட்ட 5 இடங்களில் பலத்த வெட்டு காயம் விழுந்துள்ளது. கோர்ட்டு  வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் பொதுமக்களும் வழக்கறிஞர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஓசூரில் கோர்ட்டு  வளாகத்திலேயே இளம் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ரமணி (வயது 26) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article