சென்னை,
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் 'தங்கலான்'. இதில், விக்ரமுடன், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர். கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக இது அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது.18ம் நூற்றாண்டு கால செட் அமைப்புகள், சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் பிரமிப்பைத் தருகின்றன.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதனைத்தொடர்ந்து, விரைவில் ஓ.டி.டியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தங்கலான் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், ஓ.டி.டியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது தணிக்கை சான்று பெற்று திரையரங்குகளில் வெளியான படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 'தங்கலான்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.