ஒவ்வொரு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்: தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு

4 hours ago 2

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், இன்று (21.11.2024) ஸ்ரீபெரும்புதூர், ஹூண்டாய் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் உயரமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்சி.வி.கணேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, “பாதுகாப்பு அதிகாரியின் பங்கு” என்ற கையேட்டினை வெளியிட்டார்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தொழிலாளர்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் 1991 ஆண்டு கலைஞர் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 50 ஆயிரம் ரூபாய் ஆக இருந்த உதவித்தொகையினை தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் மூலம் 1,844 பயிற்சி வகுப்புகள் 98,245 தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கீட்டின்படி 2022-23 ஆண்டில் இந்தியாவில் 18,49,492 தொழிலாளர்கள் உள்ளனர். அதில் முதலிடம் தமிழ்நாடு ஆகும். ஏறக்குறைய 15% தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

இந்தியாவில் உற்பத்தி துறையில் பணிபுரியும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஆவார்கள். அவர்களின்பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் முயற்சியினால் இந்த ஆண்டு நடைபெற்ற தீபாவளி பண்டிகையின் போது எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருந்தது எனவும், தொழிலாளர்கள் உயிர் விலை மதிக்க முடியாதது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் கொ.வீரராகவ ராவ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் எஸ்.ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் மு.வே.செந்தில்குமார், ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை உற்பத்தி அலுவலர்சி.எஸ்.கோபால கிருஷ்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

The post ஒவ்வொரு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்: தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article