எவ்வளவு ஆயிரங்கள் செலவானாலும் நம் வீடு எப்போதும் பளிச்சென இருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் மெனெக்கெடுவோம். அப்படி, வீடு, பணியிடங்கள், கடைகள், என எங்கும் உட்புற அலங்காரத்திற்கு விளக்குகள் அவசியம். விளக்குகள் உங்கள் வீட்டின் சூழலையும் உங்கள் மனநிலையையும் மாற்றும். கூடுதலாக, நன்கு ஒளிரும் வீடு உங்களை மனதளவில் லேசாகவும், மகிழ்வாகவும் வைத்திருக்கும். அதிலும் இது பண்டிகை காலம், பொதுவாக அலங்கார விளக்குகள் ஒரு பக்கம் எனில் பண்டிகைகளுக்காகவே உள்கட்டமைப்பு விளக்குகள் தேர்வும் கூட ஒரு சில குடும்பங்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மின்சார விளக்குகள் பலவகைகள் உள்ளன வீட்டின் பயன்பாடு, தேவை, அழகு, வெளிச்சம் இவை பொருத்து மின்சார விளக்குகளை எவ்வாறு தேர்வு செய்வது? மேலும் நீங்கள் எந்த வகையான வெளிச்சத்தைப் பயன்படுத்தினாலும் அதன் மூலம் கார்பன் வெளிப்பாட்டைக் குறைக்கும் ஆற்றல் திறன் கொண்ட ஒளி விளக்கைப் பயன்படுத்தவும். அவை நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் வழக்கமான ஒளிரும் பல்புகளை விட குறைந்த மின் ஆற்றலைப் எடுத்துக்கொள்ளும் இதற்கு LED பல்புகள் சிறந்தவை. அறையின் நீளம் மற்றும் அகலத்தைக் கொண்டு விளக்குகள் தேர்வு செய்வது எளிதான விதியாக இருக்கும். என்னென்ன மின்சார விளக்குகள் உள்ளன.
மேற்கூரை விளக்கு ( Ceiling light)
செவ்வக வடிவ வரவேற்பறை எனில் உட்புற விளக்கு சரியான நீள அகலங்களில் இருத்தல் நல்லது. பொதுவாக செவ்வகத்துக்குள் வட்டம், நட்சத்திரம், மலர்கள் மேற்கூரை விளக்குகள் தனி அழகுக் கொடுக்கும். மேலும் செவ்வக வடிவ அறைகளில் நடுப்பகுதி எனப் பிரிப்பதும் கடினம், என்பதால் கூடுமானவரை ரெண்டு அல்லது மூன்று விளக்குகள் டிசைன்களைப் பயன்படுத்தலாம். உங்கள் உட்காரும் அறை, சமயலறை என எதுவானாலும் செவ்வக வடிவம் எனில் விளக்குகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகப் பயன்படுத்தினால் தான் வீடு பளிச்சென இருக்கும். சதுரம் எனில் நடுப்பகுதியை கணக்கிட்டு எவ்வித மேற்கூரை விளக்குகளையும் பயன்படுத்தலாம்.
பணி விளக்கு (Task Light)
வாசிப்பு, சமைத்தல் அல்லது படிப்பது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்கு டாஸ்க் லைட்டிங் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக தேவைப்படும் இடத்தில் வெளிச்சம் கொடுக்கும் வகைகள் மற்றும் சுற்றுப்புற விளக்குகளை விட பிரகாசமாக இருக்கும். டெஸ்க்டாப் விளக்குகள் அல்லது டேபிள் விளக்குகள் உட்பட வேறு பல வகையான வெளிச்சங்களையும் கூட நாம் பணி விளக்குகளாக பயன்படுத்தலாம்.
சுற்றுப்புற விளக்குகள் (Ambient lighting)
பொது விளக்குகள் எனவும் இந்த வகையான விளக்குகளுக்கு மற்றொரு பெயர் உண்டு. எந்தவொரு இடத்தையும் முழுமையாக ஒளிரச் செய்வதே இதன் அடிப்படை நோக்கம். ஒரு அறை முழுக்க நாம் விருந்தோம்பல், பார்டி, கொண்டாட்ட அறையாக மாற்றப் போகிறோம் எனில் இந்த நிலையான அளவிலான விளக்குகளை பயன்படுத்தலாம். சுவர்களில் இருந்து பிரதிபலிக்கும் போது ஒளி சுவற்றின் நிறத்துடன் இணைந்து மேற்கொண்டு வண்ணங்களைச் சேர்க்கும். LED விளக்குகளில், தரை விளக்குகள், சுவர் விளக்குகள் மற்றும் சரவிளக்குகள் சுற்றுப்புற விளக்குகளுக்குப் பயன்
படுத்தப்படுகின்றன.
தனித்துவ விளக்குகள் (Accent lights)
தனித்துவ விளக்குகள் என்பது கதவுகள், தாவரங்கள், கலைப்படைப்புகள், சுவர் அலங்காரங்கள், நெருப்பிடங்கள் போன்ற ஒரு இடத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு இடத்தை அல்லது பொருளின் மீதான கவனத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்படும். ஒருவித அழகியலைக் கொடுக்கவும், வீட்டின் ஆளுமைக்கு இடம் கொடுப்பதிலும் இந்த விளக்குகள் முக்கியமானதாக இருக்கும். இந்த விளக்குகள்தான் வீட்டின் வசதி, வீட்டாரின் கற்பனைத் திறன், அவர்களின் பொருளாதார நிலையை எடுத்துரைக்கும் வகை விளக்குகள்.
சுவர் ஸ்கோன்ஸ் (Wall sconces)
இவையும் தன்னித்துவ விளக்குகள் போல் குறிப்பிட்ட சுவர் பகுதி, மற்றும் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றியது போன்றதொரு ரம்மியமான தோற்றம் கொடுக்க, வீட்டின் அழகைக் கூட்டவும் இந்த விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை விளக்குகள் வீட்டின் வெளிப்புற கதவுகளின் இரு ஓரங்களில் துவங்கி எங்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக தோட்டங்களில் உள்ள உட்காரும் இடங்கள், மங்கலான பாதைகளை அதிகம் பிரகாசிக்காமல் அதன் அழகியலை முன் வைத்து ஒளிக் கூட்டுவது அல்லது சுவர் அழகைக் காட்ட. இவைகள் பழங்கால கூண்டு வகை விளக்குகள் துவங்கி பல வகைகளில் உள்ளன.
மூட் லைட்டிங் (Mood Lighting)
உங்களுக்குப் பிடித்த அறையை உங்கள் மனநிலையைக்கேற்ப மாற்றிக் கொடுக்கும் விளக்குகள். இவை பெரும்பாலும் ஒரு வரவேற்பறையின் அல்லது படுக்கையறையின் இரண்டாம் அடுக்கு விளக்குகளாக பயன்படுத்தப்படும். அதாவது முதன்மை விளக்குகள் எப்போதும் இருக்கும். தேவைப்படும் போது மட்டுமே அறையின் நிறம், மற்றும் சூழலை மாற்றும் இரண்டாம் விளக்குகளாக இவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில விளக்குகள் மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விளக்குகளுடன் இணைந்த நல்ல இசையும் தற்போது புது வரவாக உள்ளன.
கட்டிடக்கலை விளக்குகள் (Architectural lighting)
வெளிப்புற , உட்புற கட்டிட அழகை காட்டுவதற்காகவே பயன்படுத்தப்படும் விளக்குகள். கோவ், சாஃபிட் மற்றும் கார்னிஸ் என மூன்று வகையான கட்டமைப்பு விளக்குகள் அதிகம் இதில் பயன்படுத்தப்படுகின்றன; அவை அனைத்தும் அறையின் வடிவமைப்பை மையமாகக் கொண்டே பொருத்தப்படும். உதாரணத்திற்கு, தாஜ்மகாலை இரவில் பார்க்கும் போது அதற்கென தனி விளக்குகள் பொருத்தப்பட்டு, கட்டிட அழகை நமக்கு இரவில் அந்த விளக்கும் உணர்த்தும். இவை பெரும்பாலும் கனமான உலோகங்களான அலுமினியம், சில்வர், மற்றும் மரம், உள்ளிட்டவற்றால் சூழப்பட்ட விளக்குகளாக இருக்கும்.
சரவிளக்குகள் (Chandeliers)
சரவிளக்குகள் இவற்றின் பயன்பாடு குறித்து நாம் சொல்ல வேண்டியதே இல்லை. பெரும்பாலும் அறையின் அழகுக்காகவே பயன்படுத்தப்படும் விளக்குகள். இவற்றில் அதிகம் கிரிஸ்டல்கள் இணைக்கப்பட்ட வகை அதிகம். பெரிய மால்கள், உணவகங்கள், பங்களாக்கள், அலுவலக வரவேற்பறைகள், பார்டி அறைகள் என இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சில சர விளக்குகள் கட்டிடக் கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி தனித்துவமாக உருவாக்கப்பட்டு பொருத்தப்படுவதும் வழக்கம்.
– கவின்
The post ஒளிரும் விளக்குகளும் அதன் வகைகளும்! appeared first on Dinakaran.