இன்றைய நவீன கால வாழ்க்கைமுறையில் மனிதனின் உடல், மனம், அறிவு, உணர்வு ஆகியவற்றுக்குப் புத்துணர்ச்சி தர உறுதுணையாக யோகா கலை உள்ளது. நமதுநாட்டில் தோன்றிய யோகா கலை இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தி தீர்க்கமாகச் செயல்பட உதவும் சக்தியாக யோகா உள்ளது. யோகாவின் மகத்துவம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால்தான் சர்வதேச அளவில் மக்கள் ஆர்வத்துடன் யோகாவைப் பயின்று வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகாவை கௌரவப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம்தேதி உலக யோகாதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த யோகாவில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பல போட்டிகளில் பங்கேற்று தனது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்தி வெற்றிக்கோப்பைகளைக் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவருகிறார்.
விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் தாலுகா கம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த குடியரசு-கீதா தம்பதியருக்குக் கவியரசி, ஜெயவர்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் சங்கம்பட்டி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் இளைய மகள் ஜெயவர்தினி யோகாவில் சிறந்து விளங்கிவருகிறார். தேசிய அளவிலான போட்டிகளிலும், வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டி களில் ஜெயவர்தினி ஆர்வத்துடன் பங்கேற்றுவருகிறார். போட்டிகளில் பங்கேற்பதோடு தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி முதல் பரிசுகளை மட்டும் தொடர்ந்து பெற்று யோகாவில் வெற்றிவாகை சூடிவரும் மாணவி ஜெயவர்தினி போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு யோகாவில் ஏற்பட்ட ஈடுபாடு பற்றி கூறுகையில், ‘‘நாடு முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவியது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக வீட்டிலேயே முடங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. டிவியில் படங்கள் பார்த்துக்கொண்டும், செல்போனில் யூடியூபில் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்து பிடித்த உணவுகளைச் சமைத்து குடும்பத்தினருடன் சாப்பிட்டு் பொழுதைக் கழித்தோம். ஒருகட்டத்தில், செல்போன் பார்த்துக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும், என்று அம்மாவும் அப்பாவும் கூறுவார்கள். ஆனால், அவர்கள் சொல்வது போல் எப்படி நேரத்தைப் பயனுள்ளதாக்குவது என்ற யோசனை மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. வழக்கம்போல் ஒரு நாள் யூடியூப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சிறுமி யோகா பயிற்சி செய்வதைக் கண்டு நானும் என் அக்காவும் வியந்தோம். நாமும் யோகா செய்யலாம். உடலுக்கும் நல்லது என்று முடிவெடுத்தோம். அப்படி முடிவெடுத்துதான் தினமும் அதிகாலையில் அப்பா, அம்மா, அக்கா ஆகியோருடன் சேர்ந்து யோகா செய்யத் தொடங்கினேன்.’’ என்று யோகாவில் ஈடுபாடு உண்டானதை விவரித்தார் ஜெயவர்தினி.
மேலும் தொடர்ந்த மாணவி ஜெயவர்தினி முறையாக யோகா பயிற்சி பங்கேற்கத் தொடங்கியதைப் பற்றி கூறும்போது, ‘‘யோகா பயிற்சியின் மூலம் மனமும், உடலும் புத்துணர்வு பெறுவதை உணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து யோகா கலையின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது. முறையாக யோகா பயிற்சிக்குச் செல்லவேண்டும், என்று எனது விருப்பத்தைப் பெற்றோரிடம் தெரிவித்தேன். எனது ஆர்வத்தைக் கண்டு பெற்றோரும் என்னை யோகா பயிற்சியில் சேர்த்தனர். யோகா ஆசிரியர் அஷ்விதா எனக்கு முறைப்படி யோகா பயிற்றுவித்தார். அதேபோல், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் நவீன்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் எனக்கு உறுதுணையாக இருந்து யோகா பயிற்சியில் தீவிரமாக ஈடுபட உறுதுணையாக இருந்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் யோகா போட்டிகளில் பங்கேற்க என் தந்தை அழைத்துச் செல்வார்.
யோகா போட்டியில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என்று ஊக்கப்படுத்துவார். அவர் அளித்த ஊக்கமும், உற்சாகமும்தான் யோகா கற்பதில் என்னை பட்டை தீட்டியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடைபெறும் யோகா போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றேன். அதனைத் தொடர்ந்து, தமிழக அளவில் நடைபெறும் போட்டிகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் பங்கேற்று அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பிடித்து வெற்றிக் கோப்பைகளைக் குவித்துள்ளேன்’’ என்று கூறிய ஜெயவர்தினியின் வீட்டு அலமாரி முழுவதும் 170க்கும் மேற்பட்ட கோப்பைகளும், 200க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் நிறைந்து பிரமிக்கவைக்கின்றன.
யோகா கலையில் பேசிக், அட்வான்ஸ்டு, சூப்பர் அட்வான்ஸ்டு ஆகிய நிலைகளில் நல்ல முறையில் பயின்றுள்ளேன். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை பொன்னேரியில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில் 800 பேர் கலந்துகொண்டனர். அதில், நான் முதல்பரிசு பெற்றேன். கோவையில் நடந்த போட்டியில் முதல்பரிசாக சைக்கிள் வழங்கினார்கள். மேலும், கொடைக்கானல், அந்தமான், மும்பை போன்ற இடங்களில் நடந்த யோகா போட்டிகளில் கலந்துகொண்டு முதல்பரிசுக்கான கோப்பைகளை வென்றுள்ளேன். அதேபோல், இம்மாதம் 7ம்தேதி ராஜபாளையத்தில் நடந்த யோகா போட்டியிலும் முதல்பரிசு பெற்றேன். இவ்வளவு பரிசுகளை வென்ற எனக்குக் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சரிடம் சான்றிதழ் பெற்றதுதான் என் வாழ்வில் மறக்கமுடியாத பரிசு’’ என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் மாணவி ஜெயவர்தினி.
தேசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று துபாயில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து மாணவி ஜெயவர்தினிக்கு ஊர்மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தனது வாழ்நாள் லட்சியம் குறித்து கூறுகையில், ‘‘இளம் சமுதாயத்தினரிடையே யோகா பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டு, நடனம், இசை போன்ற பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதைப் போல யோகா பயிற்சிக்கும் நேரம் ஒதுக்கி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை சென்று வருகின்றனர். உலகம் முழுவதும் யோகாவுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நமது அடையாளமாகத் திகழும் யோகா தற்போது சர்வதேச ஒலிம்பிக்ஸில் இடம்பிடித்துள்ளது. அடுத்து நடைபெறும் ஒலிம்பிக் யோகா போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்’’ என கூறும் மாணவி ஜெயவர்தினி வெற்றிகளைக் குவிக்க நாமும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!
-இர.மு.அருண்பிரசாத்
The post ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்! appeared first on Dinakaran.