சென்னை: குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை செயலாளர் செந்தில் குமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஒலி மாசுவை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு ஒலி மாசு ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்படுத்தல் விதிமுறைகள் 2000ஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப ஒலி அளவை பொறுத்து மாநில அரசு தொழில், வணிகம், குடியிருப்பு, அமைதி என பிரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் சிஎம்டிஏ, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை மூலம் இடத்தின் தன்மைக்கு ஏற்ப ஒலி மாசு அளவு நிர்ணயிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், அனைத்து மாநில காவல் துணை கண்காணிப்பாளர்கள், அனைத்து மாவட்ட சப் கலெக்டர்கள், அனைத்து மாவட்ட வருவாய் பிரிவு அதிகாரிகள் அந்தந்த மண்டலங்களில் ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, புகார் வந்தால் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல், எந்த பகுதியிலும் ஒலிபெருக்கி உள்ளிட்டவைகளை பயன்படுத்தக் கூடாது. அவசர காலங்கள் தவிர, இரவு நேரங்களில் பொதுவெளியில் ஒலிபெருக்கி, இசைக் கருவிகள் இசைப்பது, ஆம்ப்ளிபையர்களை பயன்படுத்துவது கூடாது.
குடியிருப்பு மற்றும் அமைதி மண்டலமாக நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில், அவசர காலங்கள் தவிர, இரவு நேரங்களில் ஹாரன் அடிக்கக் கூடாது. அமைதி மண்டலங்களிலும், இரவு நேரங்களிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது. அமைதி மண்டலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், கட்டிடப் பணிகளில் ஒலி எழுப்பும் கருவிகளை பயன்படுத்தக் கூடாது. இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து, மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
The post ஒலி மாசுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நியமனம் குடியிருப்பு பகுதிகளில் இரவு ஹாரன் பயன்படுத்தக் கூடாது: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.