சென்னை: ஒற்றுமை, மகிழ்ச்சி தழைக்கட்டும். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஏற்றமும் பெற வேண்டும் என ரம்ஜானை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: இஸ்லாமிய பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இஸ்லாமிய பெருமக்களின் பாதுகாவலராக அதிமுக என்றென்றும் இருக்கும் என்பதை இனிய நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். நபிகள் நாயகம் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: ரம்ஜான் பெருநாளில் அனைவருக்கும் கொடை வழங்கி, அவர்களுடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள், தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஏற்றமும் பெற வேண்டும். அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு, மதிமுக சார்பில் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ரம்ஜான் திருநாள் இஸ்லாமியர்களுக்கு ஏற்றத்தையும் இன்பத்தையும் தருவதாக அமையட்டும். அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள். பாமக நிறுவனர் ராமதாஸ்: உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இந்த சிறப்புமிக்க நன்னாளில் சமத்துவம் தழைக்கவும் சகோதரத்துவம் நீடித்து நிலைக்கவும் சமூக நல்லிணக்கம் செழிக்கவும் சமூக ஒற்றுமை மேம்படவும் அனைவரும் உறுதி ஏற்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ரமலான் நன்னாளில் இறைவனின் கருணையும், நல்லாசியும், அனைத்து செல்வங்களும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபட இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: எல்லாரையும் மனதால் இணைக்கும் இந்த திராவிட மாடல் நல்லாட்சி எங்கணும் பரவ வேண்டும். எல்லாமும் எல்லாரும் பெற்று இனிதாக வாழ்ந்திட வாழ்த்துவோம்.
இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்: சிறுபான்மை மக்களின் நலன் காப்பதில் தந்தையும், தாயுமானவராய் நிற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இஸ்லாமியர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் அவர் செய்து தருவதற்கு ரமலான் நாளில் நன்றி தெரிவிக்கிறோம். அனைவரும் ஜாதி, மதம், இனம்,மொழி என வேறுபாடுகள் கடந்து சகோதரத்துவ ஒற்றுமையுடன் பயணிப்போம். அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக்: புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவுகளை அருந்தி, உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து இந்நாளை இனிதே கொண்டாடுவது போல, வாழ்நாள் முழுவதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம்: உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகட்டும். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம் தலைவர் சேம.நாராயணன்:ஒரு மாதம் நோன்பிருந்து பிறை பார்த்து மனதில் மகிழ்ச்சியுடன் ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இதேபோல, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post ஒற்றுமை, மகிழ்ச்சி தழைக்கட்டும்: தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து appeared first on Dinakaran.