'ஒற்றுமை என்பதில் எங்களுக்கு இணையாக யாருமே கிடையாது' - கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

3 months ago 21

சென்னை,

டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற "இந்தி" தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது" என்றார்.

மேலும் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கவர்னரின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிரிவினைவாத எண்ணம் என்பது எங்களிடம் துளிகூட கிடையாது என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது;-

"தமிழக கவர்னர் எப்போதும் ஏட்டிக்கு போட்டியாகத்தான் இருப்பார். திராவிடம் என்ற சொல்லே அவருக்கு வேப்பங்காயைப் போல் இருக்கிறது. திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கொள்கையோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆனால் 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் யுத்தம் வந்த நேரத்தில், இந்தியாவின் நலனைக் கருதி, இந்திய மக்கள் எல்லோரும் இந்திய பேரரசுக்கு பின்னால் வலிமையோடு நிற்க வேண்டும் என்பதற்காக, எங்களுடைய திராவிட நாடு கொள்கை இப்போது முக்கியமல்ல, எங்களுக்கு இந்தியாவின் பாதுகாப்புதான் முக்கியம் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

ஒற்றுமை என்பதில் எங்களுக்கு இணையாக யாருமே கிடையாது. பிரிவினைவாத எண்ணம் என்பது எங்களிடம் துளிகூட கிடையாது. கவர்னர் ஆர்.என்.ரவி, கற்பனையால் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்."

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

Read Entire Article