ஒரேயொரு இரவு விருந்தில் ரூ.2 ஆயிரம் கோடி அள்ளி டிரம்ப் புதிய சாதனை

3 hours ago 1

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்தின் உள்ளரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணியளவில் முறைப்படி டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்பதற்கு முன்னர் அமெரிக்க பாரம்பரிய முறைப்படி, துணை ஜனாதிபதியாக வான்ஸ் பொறுப்பேற்று கொண்டார். அப்போது ராணுவ பீரங்கி குண்டுகள் முழங்கின.

இந்நிகழ்ச்சியில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து டிரம்ப் உரையாற்றினார்.

விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு டிரம்ப் இரவு விருந்து அளித்து கவுரவித்துள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து விருந்தினர்கள் சென்றிருந்தனர். இந்தியாவில் இருந்து தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீடா அம்பானி சென்றிருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் பாரம்பரிய நிகழ்ச்சியாக அல்லாமல், உலகளாவிய அரசியல் நிகழ்வாக இதனை டிரம்ப் மாற்றியுள்ளார். அவர் அளித்த இரவு விருந்திலும் அரசியல் செய்த செய்தியே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதுமுள்ள கோடீசுவரர்கள் பலரும் உண்மையில், ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உடன் தனிப்பட்ட முறையில் இரவு விருந்து சாப்பிட சென்றுள்ளனர். இதற்காக அவர்கள் பெரிய தொகையை செலவிட்டு உள்ளனர்.

டிரம்புடனான இரவு விருந்து நிகழ்ச்சி, ஒரு நிதி திரட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது. இதன்படி, 5 வகையான டிக்கெட்டுகள் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 ஆயிரம் டாலர்கள் முதல் அதிகபட்சம் 1 மில்லியன் டாலர்கள் வரை அவற்றின் விலை இருக்கும். அவரவர் விருப்பத்திற்கேற்ப டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம்.

இதில், 1 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.9 கோடி ஆகும். அதேவேளையில், டிரம்ப் மற்றும் வான்ஸ் இருவரையும் சந்திக்க பெரிய நன்கொடையாளர்கள் இரட்டிப்பாக தொகையை தர வேண்டும். இந்த 1 மில்லியன் டாலர் நன்கொடைக்கு ஈடாக, வான்ஸ் உடன் இரவு விருந்து சாப்பிட 2 டிக்கெட்டுகளும், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டிரம்ப் உடன் இரவு விருந்து சாப்பிடுவதற்கு 6 டிக்கெட்டுகளும் கிடைக்கும். இதற்காக ஏற்கனவே நிறைய பேர் பெரிய தொகையை கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.

இதன்படி, ரூ.1,700 கோடி வரை பணம் திரண்டுள்ளது. இந்த தொகையானது ரூ.2 ஆயிரம் கோடியை அடையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், ஒரு புதிய சாதனை படைக்கப்படும்.

டிரம்ப் கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியேற்பின்போது நடத்திய இரவு விருந்து நிகழ்ச்சியில் 106 மில்லியன் டாலர் தொகை ஈட்டப்பட்டது. அதன்பின்னர், பைடன் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, 135 மில்லியன் டாலர் தொகை கிடைத்தது. இந்த முறை இந்த தொகை 267 மில்லியன் டாலராக (ரூ.2 ஆயிரம் கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

டிரம்புடன் இரவு விருந்து சாப்பிடவும், அவருடன் பேசவும் பெருந்தொகையை அளிக்க வேண்டும் என்றபோதும், உலகின் மிக பெரிய தொழிலதிபர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். நன்கொடையும் அளித்துள்ளனர். எனினும், இந்த தொகையை பயன்படுத்துவது பற்றிய சர்ச்சைகளும் எழுந்துள்ளன. ஜனாதிபதி நூலகத்திற்கு நிதியுதவி செய்ய இந்த தொகையை டிரம்ப் பயன்படுத்த கூடும் என யூகங்கள் தெரிவிக்கின்றன.

என்னவானாலும், ஒரு நாள் இரவு விருந்தில் இவ்வளவு பெரிய தொகையை டிரம்ப் அள்ளியிருப்பது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Read Entire Article