திருச்சி,
தனியார் வார இதழ் சார்பில் சட்டமேதை அம்பேத்கர் குறித்த தொகுப்பு ஒன்று தயாராகி வருகிறது. இத்தொகுப்பில் நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், வி.சி.க. துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பங்களிப்பு செய்துள்ளனர். சென்னையில் வரும் டிச.6-ம் தேதிநடைபெற உள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கும், த.வெ.க. தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் இருவரும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். தன்னுடைய கட்சி மாநாட்டில் ஆட்சியில் பங்கு என த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தி.மு.க.வின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்க உள்ளது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விடுதலை சிறுத்தைகள் மீதான நம்பகத்தன்மையை சிலர் கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கின்றனர். 2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் நீடிப்போம். இந்தியா கூட்டணியை சிதறடிக்க வேண்டிய அவசியமில்லை. வேறொரு கூட்டணிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை.
புத்தக வெளியீட்டு விழா என்பது இப்போது முடிவு செய்யப்பட்டதல்ல.. ஓராண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஒரு சில வாரங்களுக்கு முன்பு புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய்யும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். ரஜினிகாந்தும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். நாங்களும் அதற்கு இசைவு அளித்திருந்தோம்.
இப்போது விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நாங்கள் முடிவு செய்வோம். முன்னணி பொறுப்பாளர்களோடு நாங்கள் கலந்து பேசி முடிவு செய்வோம்" என்று திருமாவளவன் கூறினார்.