ஒரே மகன் இறந்த துக்கம் தாளாமல் விபரீதம் கோவை லாட்ஜில் தம்பதி தற்கொலை

1 week ago 4

கோவை : கோவையில் லாட்ஜில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சிவகாசி பூலாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (39). இவருக்கும் சிவகாசி பகுதியை சேர்ந்த வத்சலா (35) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 வயதில் மகன் இருந்தான். இவர்கள் குடும்பத்துடன் கோவை வேடப்பட்டி ஸ்ரீநகரில் வசித்து வந்தனர். பழனிசாமி வீட்டில் இருந்தபடி சிறுவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். இவர்களது ஒரே மகன் கடந்த ஏப்ரல் மாதம் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

தங்களது மகன் இறந்த துக்கம் தாளாமல் தம்பதி அடிக்கடி அக்கம் பக்கத்தினரிடம் புலம்பி வந்தனர். மகனை மறக்க முடியாமல் தவித்து வந்தனர்.இதனையடுத்து இருவரும் தற்கொலை முடிவை எடுத்து கடந்த 2ம் தேதி கோவை காந்திபுரம் நேரு தெருவில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அதன் பின்னர் அவர்கள் வெளியே வரவில்லை. நேற்று முன்தினம் மாலை வரை அவர்களது அறைக்கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் மாற்று சாவி மூலம் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அவர்கள் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. தம்பதி இருவரும் விஷம் அருந்தி மூக்கில் நுரை தள்ளியபடி கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கும், காட்டூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தம்பதியை பரிசோதித்து விட்டு அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் தற்கொலை செய்த இருவரின் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவரகளது உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து மேற்கொண்டு காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவையில் மகன் இறந்த துக்கம் தாளாமல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உருக்கமான கடிதம் சிக்கியது

தற்கொலை செய்த தம்பதியின் அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் ‘‘எங்களது ஒரே ஆசை மகனை இழந்து விட்டோம். அவனை எங்களால் மறக்க முடியவில்லை. இதனால் நாங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறோம். எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’’ என்று எழுதி அதன் கீழே அவர்களது உறவினர்களின் செல்போன் எண்களை குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

The post ஒரே மகன் இறந்த துக்கம் தாளாமல் விபரீதம் கோவை லாட்ஜில் தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article