ஒரே நாளில் 55 மனுதாரர்கள் நேரடி விசாரணைக்கு அழைப்பு பிறப்பு, இறப்பு சான்று விசாரணை தாமதத்தால் மனுதாரர்கள் வாக்குவாதம்

1 week ago 4

*ஆர்டிஓ, தாசில்தார் சமரசம்

அணைக்கட்டு : அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் ஒரே நாளில் 55 மனுதாரர்கள் நேரடி விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது காலதாமத பிறப்பு, இறப்பு சான்று விசாரணை தாமதமானதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனுதாரர்களிடம் ஆர்டிஓ, தாசில்தார் சமரசம் செய்து வைத்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் காலதாமத பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு வேலூர் ஆர்டிஓவிடம் பலர் மனு அளித்துள்ளனர். இதில் தாசில்தார் வரை விசாரணை நடத்தி முடிக்கப்பட்டவர்களிடம் ஆர்டிஓ நேரடி விசாரணை நடத்தும் சிறப்பு முகாம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. 55 மனுதாரர்களில் 53 மனுதாரர்கள் சாட்சிகளுடன் விசாரணைக்காக தாலுகா அலுவலகத்தில் ஆஜராகினர்.

மனுதாரர்கள் அவர்களுடன் சாட்சிக்கு வந்தவர்களும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு காத்திருந்தனர். இதனிடையே மதியம் 2 மணிக்கு மேல் தாலுகா அலுவலகத்திற்கு வந்து ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் விசாரணையை தொடங்கினார். ஒவ்வொரு மனுதாரர் மற்றும் அந்த மனு சம்பந்தப்பட்ட சாட்சிக்கு வந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அனைவரும் தாசில்தார் அறையின் வெளியே அலுவலகத்தில் நேரடி விசாரணைக்காக கூட்டமாக காத்திருந்தனர். இதில் சிலர் நாங்கள் காலையிலிருந்து காத்திருக்கிறோம். மதிய உணவிற்கு கூட செல்லாமல் காக்க வைத்துள்ளீர்கள் எனக்கேட்டு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அனைவரையும் கூட்டமாக நிற்க வைத்து செல்போன்களில் படம், வீடியோ எடுத்தபடி கூச்சலிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அணைக்கட்டு போலீசார் அலுவலகத்திற்கு வந்து அவர்களை சமரசப்படுத்தினர். மேலும் தகவலறிந்த ஆர்டிஓ, தாசில்தாரும் வெளியே வந்து உங்களை நாங்கள் காத்திருக்க சொல்லவில்லை, உணவுக்கு செல்ல வேண்டாம் என நிர்ப்பந்திக்கவில்லை. 50, 60 ஆண்டு கால பழைய பிறப்பு, இறப்பு சான்று கேட்டு விண்ணப்பித்திருப்பதால் விசாரணை முழுமையாக நடத்தப்பட வேண்டி உள்ளது. மேலும் அனைவரின் மனு மீதும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.

தொடர்ந்து போலீசார் அலுவலகத்தில் கூட்டமாக காத்திருந்த விசாரணைக்கு வந்த நபர்களை ஒழுங்குப்படுத்தி இருக்கைகளில் அமர வைத்து ஒவ்வொரு மனுதாரர்களையும் உள்ளே அனுப்பி விசாரணைக்கு அனுமதித்தனர். மேலும், பிரச்னை செய்த இரண்டு நபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர், ஆர்டிஓ உத்தரவின்பேரில் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

The post ஒரே நாளில் 55 மனுதாரர்கள் நேரடி விசாரணைக்கு அழைப்பு பிறப்பு, இறப்பு சான்று விசாரணை தாமதத்தால் மனுதாரர்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article