
சென்னை,
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன வளாகத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் நாளையே தொடங்கப்போது இல்லை. 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறையை தொடங்குவார். இது ஒரு பெரிய முயற்சி. தேர்தல் ஆணையத்துக்கும் இந்த சட்டத்திருத்தத்தால் அதிகாரம் கிடைக்கும். 2029-ல் ஜனாதிபதி மூலம் இது தொடங்கப்பட்டால், எல்லா மாநில சட்டமன்றத்தின் காலக்கட்டங்களையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவதற்கான முயற்சி அப்போது இருந்து தொடங்கும். அதாவது, 2034-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு முடிவடையும். எனவே 2034-க்கு முன்னதாக ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வராது.
இது ஏதோ நாளைக்கே நடைமுறைக்கு வருவதுபோல, தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புகிறவர்களுக்கு இதை எடுத்து சொல்ல வேண்டும். இது போன்ற பெரிய விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டோம். அதிகம் சிந்தித்து, நிபுணர்களை கலந்தாலோசித்த பிறகுதான் இதை நடைமுறைப்படுத்த இருக்கிறோம்"இவ்வாறு அவர் பேசினார்.