
நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதேவேளை, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திட்டம் அதிபர் ஆட்சி முறையை கொண்டுவரும் முயற்சி என்று குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தலை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். நாட்டின் நலனுக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான நடைமுறையை ஜனாதிபதி தொடங்குவார்' என்றார்.