ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதி - சட்டத்துறை மந்திரி

5 hours ago 2

ஜெய்ப்பூர்,

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன், நிதி ஆயோக் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு அனைத்தும் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து உள்ளன. பின்னர் மத்திய மந்திரி சபையும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் அரசியல் சாசன திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அவை ஒரு நாடாளுமன்றக்குழுவால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.அத்துடன் பல்வேறு சமூக அமைப்புகளும் இது குறித்து விவாதங்களில் ஈடுபட்டு உள்ளன. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தேசிய நலன் சார்ந்தது. எனவே இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. 1952, 1957, 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன" என்று அர்ஜுன் ராம் மெக்வால் கூறினார்.

Read Entire Article