புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார். அந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நியமித்தார். அந்த கூட்டுக்குழுவுக்கு தலைவராக பாஜ எம்பியும், முன்னாள் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சருமான பிபி சவுத்ரியை நியமித்துள்ளதாக நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த குழுவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பர்ஷோத்தம் ரூபாலா, மணீஷ் திவாரி மற்றும் பிரியங்கா காந்தி , பன்சூரி ஸ்வராஜ், சம்பித் பத்ரா உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் மக்களவையில் இருந்து 27 எம்பிக்களும், மாநிலங்களவையில் இருந்து 12 எம்பிக்களும் இடம் பெற்றுள்ளனர்.
கூட்டுக்குழுவில் உள்ள 39 உறுப்பினர்களில், 16 பேர் பாஜவைச் சேர்ந்தவர்கள், 5 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுகவில் இருந்து தலா 2 பேர் இடம் பெற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் 22 உறுப்பினர்களும், இந்தியா கூட்டணியில் 15 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த குழு தனது அறிக்கையை அடுத்த கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாளுக்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டுக்குழு தலைவராக பாஜ எம்பி நியமனம் appeared first on Dinakaran.