புதுடெல்லி: பிரிட்டிஷ்கால சட்டங்களை அகற்ற வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டிற்கு அவசியம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில் தெரிவித்தார். 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை: நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் காலனித்துவ மனப்பான்மையின் எச்சங்களை அகற்றுவதற்கான ஒன்றிய அரசின் தொடர் முயற்சிகள் தொடர வேண்டும். அந்த அடிப்படையில் தான் பிரிட்டிஷ் கால குற்றவியல் சட்டங்களை மாற்றி மூன்று புதிய, நவீன சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்த வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஆட்சியில் நிலைத்தன்மையை ஊக்குவித்தல், கொள்கை முடக்கத்தைத் தடுத்தல், வளங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் நாட்டில் நல்ல நிர்வாகத்தை மறுவரையறை செய்யும் திறனை அது கொண்டுள்ளது. இந்தியாவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் கல்வியின் முக்கியத்துவம் அவசியம். கல்வித் துறையில் அரசாங்கம் முதலீடுகளை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கற்றல் தரம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம், குறிப்பாக பிராந்திய மொழிகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த கல்வி மாற்றத்தில் பெண் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர், இவ்வாறு அவர் கூறினார். இஸ்ரோவின் பாய்ச்சல் பிரமாண்டம்: ஜனாதிபதி முர்மு கூறுகையில்,’ விண்வெளியில் சமீப ஆண்டுகளில் இஸ்ரோ மாபெரும் சாதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மாதம், இஸ்ரோ விண்வெளியில் இரண்டு விண்கலங்களை இணைக்கும் வெற்றிகரமான பரிசோதனையின் மூலம் தேசத்தை மீண்டும் பெருமைப்படுத்தியது. இந்த திறனை பெற்ற உலகின் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது’ என்றார்.
The post ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை appeared first on Dinakaran.