ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் போக நெற்பயிர்களுக்கு தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மோட்டார் மூலம் பெரிய கண்மாய் தண்ணீரை நெற்பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளான பிச்சனார்கோட்டை, இருதயபுரம், நெடும்புளிக்கோட்டை, பொட்டக்கோட்டை, புலிவீரதேவன்கோட்டை, பனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் தற்போது இரண்டாம் போக கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர்.
நெற்பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்துள்ளபோதும், முழு மகசூல் நிலையை எட்ட வேண்டும் என்றால் அடுத்த இரு வாரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், பெரிய கண்மாயில் தற்போது மிகவும் குறைந்த அளவே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கத்தால் வாடி வருகிறது. இதனால், விவசாயிகள் பெரிய கண்மாய் அருகே பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் இரைத்து நெல் வயல்களுக்கு பாய்ச்சுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீர் வற்றியுள்ளது. குறைந்தளவே தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், நெற்பயிர்களுக்கு அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் அளித்தால் மட்டுமே முழுமையான மகசூலை எட்ட முடியும். இதனால் கூடுதல் செலவு செய்து டீசல் மோட்டார் மூலம் பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை நெற்பயிர்களுக்கு இரைத்து வருகிறோம். போதிய தண்ணீர் அளிக்காவிட்டால் நெற்பயிர்கள் கருகி மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என்று தெரிவித்தனர்.
The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு: நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் appeared first on Dinakaran.