ஒரே நாடு ஒரே தேர்தல்

2 months ago 13

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இறுதியாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆரம்ப சுற்று விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்களும், எதிராக 198 எம்பிக்களும் வாக்களித்தனர். இதனால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் மகிழ்ந்துள்ளன. தற்போது இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்குழு 90 நாட்களில் மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும்.

கூட்டுக்குழுவில் பாஜவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு இந்த மசோதா ஏற்கப்படும். இதனை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நமது நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஆகும். சுதந்திரத்திற்குப் பின் நடந்த ஒரு சில மக்களவை தேர்தல்கள், மாநில சட்டப் பேரவை தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

1967 வரை இதே நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் ​​1968 மற்றும் 1969ல் சில மாநில சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை சீர்குலைந்தது. அதன்பிறகு ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறை இல்லை. ஆனால் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார். இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த குழு அளித்த திருத்தங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்காக அரசியல் சாசனத்தில் 129வது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மக்கள் அளிக்கும் வரிப்பணம் மிச்சமாகும், நாடு முழுவதும் ஆங்காங்கே ஒவ்வொரு வருடமும் தேர்தல் நடக்காது, வளர்ச்சி பணிகளில் 5 ஆண்டுகள் முழுமையாக கவனம் செலுத்த முடியும் என்று பா.ஜவினர் கூறி வருகிறார்கள். ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டின் பன்முகத்தன்மை மாறிவிடும், மாநிலங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, அதிபர் தேர்தல் போல் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒன்றிய அரசு உத்தரவிட்டால் சட்ட விதிகளின்படி ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அத்தனை எதிர்ப்புகளையும் மீறி மசோதாவை மக்களவையில் மோடி அரசு அறிமுகம் செய்துவிட்டது. இந்த மசோதா நிறைவேற மக்களவையில் 362 எம்பிக்களும், மாநிலங்களவையில் 167 எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். அதனால் தற்காலிகமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைத்திருக்கிற மோடி அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை. அப்படியே மசோதா நிறைவேறினாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் இப்போதைக்கு இல்லை. அது 2034 ஆண்டில் தான்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் appeared first on Dinakaran.

Read Entire Article