ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை: பெங்களூருவில் சோகம்

3 months ago 15

பெங்களூரு: பெங்களூருவில் இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்புர்கியை சேர்ந்தவர் அவினாஷ் (38), டிரைவர். இவரின் மனைவி மம்தா(30) ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஆதிரா (5) மற்றும் அண்ணய்யா(3) என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக பெங்களுருவில் எலகங்கா தாலுகா சிக்கநாயகனஹள்ளியில் வசித்துவந்துள்ளனர்.

ஒவ்வொரு தசராவிற்கும் அவர்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாகும். இந்த முறை ஊருக்கு செல்லவில்லை. எனவே, அவினாஷின் சகோதரர் பெங்களூருவுக்கு வந்த போது போன் செய்தார். ரிங் போனாலும் யாரும் எடுக்கவில்லை. மேலும் அவர்களின் வீட்டின் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதில் அச்சமடைந்த அவர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்த போது அவர்கள் அனைவரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து தரையில் படுத்த நிலையில் உயிரிழந்திருந்த மம்தா மற்றும் குழந்தைகளின் உடலையும், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவினாஷின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே போலீஸ் கண்காணிப்பாளர் சிகே பாபா, சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

இது குறித்து போலீஸ் கண்காணிப்பாளர் சிகே பாபா கூறுகையில், ‘அவினாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குழந்தைகள் மற்றும் மமதா எப்படி இறந்தனர் என்பது பிரேதபரிசோதனையில் தான் தெரியவரும். அக்கம் பக்கத்தில் விசாரித்த போது சண்டை சச்சரவு இன்றி குடும்பம் நடத்தியதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

The post ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை: பெங்களூருவில் சோகம் appeared first on Dinakaran.

Read Entire Article